ஆற்று மீன்

எதை எதிர்பார்த்து
எதை எதிர்கொள்ள
இத்தனை பிரயாசப்படுகிறது
எதிர் நீச்சல் போடும்
ஆற்று மீன் ?
*
-மன்னை முத்துக்குமார்.

வியாபாரி !

பொருள் இருக்கும்
எடைத் தட்டை தாழ்த்தி
விலையில் சரி செய்து விடுகிறார் ..
வியாபாரி !
*
~~ மன்னை முத்துக்குமார்.

வீட்டுச்சுவர்


குழந்தைகளின்
 கிறுக்கல்களுக்காக
வெள்ளையடிக்கப்படாத 
வீட்டுச்சுவர் சொல்லும்
தந்தையின் பாசத்தை !
*
~~ மன்னை முத்துக்குமார்.~~

சீக்கிரம் முளைத்துவிடு ...


ஆஸ்துமாவில்
அல்லல்படும் அம்மாவையும்
ஆக்ஸிடெண்டில்
காலிழந்த அப்பாவையும்
ஆறாம் வகுப்பு படிக்கும்
தங்கையையும்
காப்பாற்றுவதென் ஊதியம்
தானென்று
சொன்னாலும் நம்பமாட்டார்
குழந்தை தொழிலாளர் என்று
சீர்திருத்த பள்ளிக்கு
அனுப்பிவிட்டால் ..
சீக்கிரம்
முளைத்துவிடு
மீசையே..!
*
~~ மன்னை முத்துக்குமார். ~~

ஆராதனா


ஆராதனா
சமத்துவக் கல்வி பயில்கிறாள்
“செட்டிநாடு” வித்யாஸ்ரமத்தில்..!
*
----
 குருத்தொட்டுச் செடிக்கு
காய்க்கும் திறன் அதிகம் என்ற கோவிந்தன் தான்
சாதி மறுப்பு திருமணம் செய்த தன் மகளை
கெளரவத்துக்காய் கொன்று தீர்த்தான் !
*.
கரிசனம் !
ஓட்டுப்பெட்டியில் பொத்தானை அழுத்தும் வரை
அணையாமல் இருந்தது மின்சாரம் ..!
*
 பதில் தெரிந்த கேள்விகளை
ஒருபோதும் குழந்தைகள் கேட்பதில்லை !
*
~~ மன்னை முத்துக்குமார்.

சுண்ணாம்பு ஓவியங்கள் !

கோடைமழை
வரவேற்க மனமில்லை
பேருந்து நிலைய உட்புறச் சாலையில்
சுண்ணாம்பு ஓவியங்கள் !
*
வீட்டுக்கு வந்ததும்
திறந்து பறக்க விட்டான்
கூண்டிலிருந்த காதல் பறவைகளை
சிறைவாசி !
*
விடுமுறை தினங்களில்
கூடுதல் அழகு வந்து விடுகிறது
மெரினாவுக்கு !
*
 குண்டு துளைக்காத
கூண்டுக்குள் இருந்துகொண்டு
குடியரசு தின உரையாற்றுகிறார் ஜனாதிபதி
நம்புங்கள் இந்தியா சுதந்திர நாடு தான் !
*
 நண்பர்களோடு உணவகம்
ஆர்டர் செய்துவிட்டு பேண்ட் பாக்கெட்டை
தொட்டுப் பார்க்கும் கை !
*