Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

ஆராதனா


ஆராதனா
சமத்துவக் கல்வி பயில்கிறாள்
“செட்டிநாடு” வித்யாஸ்ரமத்தில்..!
*
----
 குருத்தொட்டுச் செடிக்கு
காய்க்கும் திறன் அதிகம் என்ற கோவிந்தன் தான்
சாதி மறுப்பு திருமணம் செய்த தன் மகளை
கெளரவத்துக்காய் கொன்று தீர்த்தான் !
*.
கரிசனம் !
ஓட்டுப்பெட்டியில் பொத்தானை அழுத்தும் வரை
அணையாமல் இருந்தது மின்சாரம் ..!
*
 பதில் தெரிந்த கேள்விகளை
ஒருபோதும் குழந்தைகள் கேட்பதில்லை !
*
~~ மன்னை முத்துக்குமார்.

சுண்ணாம்பு ஓவியங்கள் !

கோடைமழை
வரவேற்க மனமில்லை
பேருந்து நிலைய உட்புறச் சாலையில்
சுண்ணாம்பு ஓவியங்கள் !
*
வீட்டுக்கு வந்ததும்
திறந்து பறக்க விட்டான்
கூண்டிலிருந்த காதல் பறவைகளை
சிறைவாசி !
*
விடுமுறை தினங்களில்
கூடுதல் அழகு வந்து விடுகிறது
மெரினாவுக்கு !
*
 குண்டு துளைக்காத
கூண்டுக்குள் இருந்துகொண்டு
குடியரசு தின உரையாற்றுகிறார் ஜனாதிபதி
நம்புங்கள் இந்தியா சுதந்திர நாடு தான் !
*
 நண்பர்களோடு உணவகம்
ஆர்டர் செய்துவிட்டு பேண்ட் பாக்கெட்டை
தொட்டுப் பார்க்கும் கை !
*


பொய் முகங்கள் !



நீங்க
சைவமா?
அசைவமா?
வீட்டு உரிமையாளர் கேட்டார்.

உன் குலதெய்வம் என்னப்பா ?
வேலை கேட்ட இடத்தில்
ஓட்டல் முதலாளி கேட்டார்
வலிக்கவில்லை ;

வலித்தது
முற்போக்காளர்கள்
கூட்டம் முடிந்து
அவரின் நண்பரிடம்
அறிமுகம் செய்யும் போது
  ‘இவரும் உங்க ஆளு தான்’
என்ற போது !!
;-(

மெய்ப்பிக்கத் தேவையில்லை !

போலிகள் தான்
போராட வேண்டும் ;
உண்மைக்கு ஒருபோதும்
தன்னை மெய்ப்பிக்கத் தேவையில்லை !
*

ஏதோ ஒரு கவிதை


புத்தகக் கடையில்
கவிதை புத்தக வரிசையில்
சிக்கும் கவிதை நூலில்
புரட்டி பார்க்கும் ஏதோ
ஒரு கவிதை தான்
முடிவு செய்கிறது ,
அது கடையை விட்டு
வாசகன் வீட்டுக்கு போவதா
இல்லையாவென்று
எந்த கவிதை என்பது
வாசகனுக்கும்
வார்த்தவனுக்கும்
சம்பந்தபட்ட விசயம்
நமக்கென்ன ?
*

திருவாய்ச்செடிக்குளத்தில்


கபடி
கோலி
கிரிக்கெட்
எல்லாம்
என்னோடு தான்
விளையாடினான்;
கணீர் குரல்
கரகரக்கும் வயது
அவனாகவே தான் விலகினான்
மெல்ல மெல்ல
அவள்களோடு நூறாங்குச்சியும்
தாயமும் பிடித்துப்போனதவனுக்கு
நாலுமூல அத்தாச்சியும்
அவன் ப்ரியமானது
கூடப் பெரிதாகப்படவில்ல,
திருவாய்ச்செடிக்குளத்தில்
 
தனியே குளிக்கையில் மாராப்பு
கட்டிக்கொண்டவனை
பார்த்தமாத்திரம் தான் புரிந்தது
அவன் மூணாம் பாலினம் ஆகிப்போனது
பதற்றத்தில் அவன்/ள்
அம்மாவிடம் சொல்லப்போனால்
விம்மி அழுதவள்
வெளில சொல்லிடாதே 
எனக்கும் தெரியுமென்கிறாள் !
*

குழந்தை மனசு !

குழந்தையின் மனசும் உடைந்தது
பலூனோடு சேர்த்து !
*

முற்போக்கு வாதி..

மேடைக்கு மேடை
முற்போக்கு பேசி திரியும் முனுசாமி தான்
தன் மகளுக்கு
நம்ம சாதி பையன் இருந்தா சொல்லுங்கன்னு
மேட்ரிமோனியல் நிறுவனரிடம் ரகசியமா
சொல்லிட்டுப் போறார் !
*

மரத்தின் மதிப்பு

தூசு படிந்த காற்றை
தன் இலைகளால்
தட்டி விரட்டி
தூய காற்றையும்
வெயிலின் உக்கிரத்தை
தன்னகத்தே தாங்கி கொண்டு
குளுமையை மட்டும் கொடுத்த
மரத்தின் மதிப்பை
அது எத்தனை விலைபெறும்
என்று கணக்கிடுவதும்
பெற்றோரை முதியோர் இல்லம்
அனுப்பி வைப்பதும் ஒன்றே !
.
-மன்னை முத்துக்குமார்.

முதியோர் இல்லம்.


முன் கூட்டியே 
கட்டிவிட்டான்
சமாதி யை,
மகன்.
”முதியோர் இல்லம் “ 
என்ற பெயரில்